எந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்!
உளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா?
தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.
பொதுவாகத் திறந்தவெளிப் படிப்பு என்றால் படிப்புக்கு மதிப்பு இல்லை என நினைப்பார்கள். ஆனால் இங்குப் பாடத்திட்டம் மாநில பாடத்திட்டத்துக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கும் இடையிலான தரம் கொண்டதாக இருக்கும். தேர்வில் தவறிய மாணவர்கள் மட்டும் கல்வி மையம் மட்டுமல்ல இது. தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருபவர்கள் உண்டு. அதேபோல், அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவோர் அநேகர்.
எவ்வித அடிப்படைக் கல்வித் தகுதி இல்லாதவர்களும் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து நேரடியாக 10-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். அதன் பிறகு அவர்கள் விரும்பினால் பள்ளியில் பிளஸ்-1 சேரலாம். அல்லது 2 ஆண்டு கழித்து தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு எழுதி பிறகு கல்லூரியில் சேரலாம். தேசியத் திறந்தநிலைப் பள்ளிக்கு நாடு முழுவதும் 19 மையங்கள் செயல்படுகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான மண்டலம் சென்னையில் உள்ளது.
குறைந்தபட்சம் 14 வயது நிரம்பிய எவர் வேண்டுமானாலும் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு சேரலாம். எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். இதற்கு அவர்களே சுயஉறுதிமொழி அளிக்கலாம். வயது வரம்பு ஏதும் கிடையாது.
பிறந்த தேதிக்கு மட்டும் அத்தாட்சி சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறந்தநிலைப் பள்ளியின் இணையதளத்தில் (www.nios.ac.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 5 பாடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல்-தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், வர்த்தகக் கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாசாரம்,
ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேசன்ஸ-இவற்றில் தங்களுக்குப் பிடித்தமான 3 அல்லது 4 பாடங்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம். மேலும், விருப்பமான ஒரு தொழில்கல்விப் பாடத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
கட்டணம்
அட்மிஷன், புத்தகம் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து கட்டணம் ரூ.1,800. பெண்கள் என்றால் ரூ.1,450, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,200 மட்டுமே.
கட்டணத்தை ஆன்லைனில் நெட்-பேங்கிங் மூலமாகவோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்திவிடலாம்.
அட்மிஷன் போட்டுவிட்டால் வீட்டு முகவரிக்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
இதேபோல், பிளஸ்-2 சேர வேண்டுமானால் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.2,000. பெண்களுக்கு ரூ.1,650. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மற்ரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,300 மட்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்று அல்லது 2 பாடங்களையும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுண்டன்சி, ஓவியம், மனையியல், உளவியல், சுற்றுச்சூழல், மாஸ் கம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆபரேஷன்ஸ் ஆகிய 18 பாடங்களில் ஏதேனும் 3 அல்லது 4 பாடங்களை தேர்வுசெய்து படிக்கலாம். விரும்பம் இருந்தால் கூடுதலாக 2 பாடங்கள் எடுத்தும் படிக்கலாம். (https://sdmis.nios.ac.in/home/fees)
வகுப்புகளுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம். கட்டாயமில்லை. சேர்க்கை மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒன்று.
செப்டம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை ஒன்று இரு நிலைகளில் நடக்கிறது.
தமிழ்வழியில் பாடங்கள்
பணிச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் பள்ளிப் படிப்பை இடையில் கைவிட்டவர்களுக்கு 10 -ஆம் வகுப்பு தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படுவதுடன், இந்தத் தேர்வை அவர்கள் தமிழிலும் எழுதலாம்.
தமிழக மாணவர்களின் நலன் கருதி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ல் பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் கல்விச் சான்றிதழ்:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்படும் தேசிய கல்வி வாரியமான தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் ("என்ஐஓஎஸ்') சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 14 வயது பூர்த்தியானவர்கள் முதல் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். வடமாநிலத்தில் 73 வயது முதியவர் ஒருவர் இதன் மூலம் படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தக் கல்வி நிறுவனத்தின் மூலம் இதுவரை 40 லட்சம் பேர் படிப்பை முடித்துள்ளனர். இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் கல்விச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் இதில் ராணுவ வீரர்கள், ஐஐடி முடித்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கான கல்வித் திட்டங்களும் உள்ளன. இதற்காக ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சென்னையில் 30 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 130 மையங்கள் உள்ளன. "தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம், லேடி வெலிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005' என்ற முகவரியிலும், 044-28442237, 28442239 என்ற தொலைபேசி எண்களிலும் இதுதொடர்பாக மேலும் தகவல்களை பெறலாம். .
rcchennai@nios.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.nios.ac.in
https://niosrcchennai.org
Post a Comment