நம்மை எங்கேயும் எப்போதும் சூழ்ந்திருக்கும் சிறுசிறு உயிர்களான பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றைப் பற்றிப் படிக்கும் படிப்பது, மைக்ரோ பயாலஜி எனப்படும் நுண்ணுயிரியல். இந்தப் படிப்புக்கு மருத்துவம், உணவு, மாசு கட்டுப்பாடு, தடயவியல் போன்ற துறைகளில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
துறை பற்றி...
நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகள், அவற்றால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள், அதை எவ்வாறு ஆக்கப்பூர்வச் செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், நுண்ணுயிரிகள் ஏற்படுத்தவல்ல தீமைகள், அதற்கான அடிப்படை சிகிச்சைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கைகள்... என நுண்ணுயிரிகள் பற்றிய அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல்களே மைக்ரோ பயாலஜி படிப்பு.
உதாரணத்துக்கு, ஒரு பாக்டீரியாவைக் கொண்டு உணவு தயாரிக்க முடியும் என்றால் எப்படி அந்த உணவைத் தயாரிப்பது, ஒரு வைரஸ் மூலம் நோய் பரவும் என்றால் எப்படி அதைத் தடுப்பது போன்றவை. மேலும் எங்கும் எதிலும் உள்ள நுண்ணுயிரிகள், அவற்றின் நச்சுத்தன்மை விகிதம் ஆகியவற்றையும் செயல்முறைக் கல்வியாகப் பயிலலாம்.
யாரெல்லாம் படிக்க முடியும்?
பன்னிரெண்டாம் வகுப்பில் பயாலஜி, பயோ பாட்டனி, பயோ ஜுவாலாஜி, பயோ அக்ரி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகப் படித்தவர்கள் இளங்கலை பி.எஸ்.ஸி., மைக்ரோ பயாலஜி படிப்பை படிக்க முடியும்.
‘மைக்ரோபயாலஜி’ (Microbiology) ஒரு பன்முகத்துறைகள் ஒருங்கிணைந்த அறிவியல் படிப்பாகும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி.டெக்., மற்றும் பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி போன்ற படிப்பில் சேரலாம்.
மருத்துவம், உணவு, தொழில்துறை மைக்ரோபயாலஜி மற்றும் மைக்ரோபியல் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒன்றில் ஸ்பெஷலைசேஷனுடன் முதுநிலை படிப்பை படிக்கலாம். மேலும், ஆராய்ச்சி பட்டப்படிப்பையும் மாணவர்கள் தொடரலாம்.
சிலபஸ்!
அக்ரிகல்ச்சர் கெமிஸ்ட்ரி, வைராலாஜி, உணவு, மருத்துவம், சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல், ஜெனிடிக்ஸ், பயோ ஃபெர்டிலைசர்ஸ் எனப்படும் இயற்கை உரம், தொழில்துறை நுண்ணுயிரியல், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்றவை பாடங்களாகக் கற்றுத்தரப்படும்.
காளான் உற்பத்தி, மண், காற்று, தண்ணீர் மாசு மற்றும் தரப் சோதனை, ரத்த பரிசோதனை, கடும் நோய்களுக்கான வைரஸ் சோதனை, இயற்கை உரம் தயாரித்தல், நுண்ணுயிரிகள் மூலம் உணவுப் பண்டங்கள் தயாரித்தல், பால் தரம் சோதித்தல் போன்றவற்றை செயல்முறை கல்வியாக மாணவர்கள் படிப்பார்கள். மேலும் உணவு, மருந்து, அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் ஸ்பைருலினா எனப்படும் பாசி வகையை ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கக் கற்றுத்தரப்படுவார்கள்.
எங்கு படிக்கலாம்?
அண்ணாமலை, பாரதிதாசன், பெரியார் மணியம்மை, திருவள்ளுவர், சாஸ்த்ரா, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், அவற்றின் கீழ் இயங்கும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மூன்று ஆண்டு இளங்கலை மைக்ரோ பயாலஜி படிப்பை வழங்குகின்றன. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான இன்டக்ரேடட் படிப்பும் (இளங்கலை மற்றும் முதுகலை ஒரே படிப்பாக) பல கல்லூரிகளில் உள்ளன.
இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள்
மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் - ஹரியானா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பாபேசாகிப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உட்பட நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த படிப்பை வழங்குகின்றன.
மேற்படிப்பு!
இளங்கலை நுண்ணுயிரியல் படித்தவர்கள் மேற்கொண்டு முதுகலை, எம்.ஃபில், பி.ஹெச்.டி என நுண்ணுயிரியலில் அடுத்தடுத்துப் படிக்கலாம். மேலும் எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேடிக்ஸ் போன்றவற்றையும் முதுகலை கோர்ஸாக எடுத்துப் படிக்கலாம். நொதித்தல் (ஃபெர்மென்டேஷன்) , மஷ்ரூம், ஃபுட் டெக்னாலஜி போன்ற டிப்ளோமா கோர்ஸ்களும் படிக்கலாம்.
வேலைவாய்ப்பு!
நுண்ணுயிரியல் படிப்புக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள் உள்ளன.
இளங்கலை முடித்தவர்கள் தண்ணீர் மற்றும் உணவு தரம் சோதனையாளர், பயோ மெடிக்கல் சயின்டிஸ்ட், மருத்துவ ஆராய்ச்சியாளர் (நோய்கள், அதற்கான மருந்துகளைக் கண்டுபிடித்து வடிவமைத்தல்), தடயவியல் நிபுணர் (விரல் ரேகை சோதனை), டெக்னிக்கல் பிரியூவர் (Brewer) (நொதித்தல் மூலமாக உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் நுண்ணுயிரி கட்டுப்பாடு), மெடிக்கல் கோடிங் என பிரகாசமான வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
மேற்படிப்பு முடித்தவர்களுக்குப் பேராசிரியர் பணிவாய்ப்புகள் உண்டு.
பயோடெக் கார்பரேட் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள ஆய்வகங்கள், பார்மசூடிக்கல் நிறுவனங்கள், உணவு, பானம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள், கிளினிக்கல் ஆராய்ச்சி மற்றும் புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் தொழில்துறைகள், அரசு ஏஜென்சிகள் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
Post a Comment