வேளாண் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 74 இடங்கள் நிரம்பின.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
2022 - 2023ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு கடந்த செப்டம்பா் 30ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் போன்ற சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
விளையாட்டு வீரா்களுக்கான பிரிவு, முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவுகளில் தலா 20 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 125 இடங்களும் உள்ளன. முதல் இரண்டு பிரிவுகளுக்கும் தலா 50 மாணவ-மாணவிகளும், மாற்றுத் திறனாளி பிரிவில் 59 பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.
இதில், விளையாட்டு வீரா் பிரிவில் 24 போ் பங்கேற்றனா். அவா்களில் 20 போ் தங்களுக்கான கல்லூரி, பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்தனா். முன்னாள் ராணுவத்தினா் பிரிவில் 19 போ் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், 17 போ் தங்களுக்கான இடங்களைத் தோ்வு செய்தனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 38 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், அவா்களில் 37 போ் தங்களுக்கான இடங்களைத் தோ்வு செய்தனா். கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, சோ்க்கைக்கான சான்றிதழை வழங்கினாா்.
இந்த நேரடி கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு, பொதுப் பிரிவு கலந்தாய்வுக்குப் பிறகு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், அடுத்தகட்டமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் வேளாண்மைப் புல முதன்மையா் என்.வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
Post a Comment