TNEA2022: 49 ஆயிரம் பேர் பங்கேற்கும் இன்ஜினியரிங் 3ம் சுற்று கவுன்சிலிங்..
தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இரண்டு சுற்றுக்கள் முடிவில், 45 ஆயிரத்து 577 பேர் தகுதி பெற்ற நிலையில், 30 ஆயிரத்து 298 பேர் இன்ஜினியரிங் படிப்பில் ஒதுக்கீடு பெற்று, கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.
மூன்றாவது சுற்றுக்கான விருப்ப பதிவு ஆன்லைன் வழியில் துவங்கியது. இதில், 49 ஆயிரத்து 43 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த சுற்றுக்கான விருப்ப பதிவு நாளை மாலை 5:00 மணிக்கு முடிகிறது. நாளை மறுநாள் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
நான்காம் சுற்று, வரும் 29ம் தேதி துவங்க உள்ளது. இதில், 62 ஆயிரத்து 658 பேர் பங்கேற்கின்றனர். மூன்று மற்றும் நான்காம் சுற்றுகளில், மொத்தம் 1.39 லட்சம் இடங்களுக்கு, 1.11 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கல்லுாரிகளின் காலியிட பட்டியல், www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
80 கல்லுாரிகள் டல்
இரண்டாம் சுற்று நிலவரம் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, நான்கு சுற்று கவுன்சிலிங்கின் நிறைவின்போது, 65 ஆயிரம் இன்ஜினியரிங் இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக வாய்ப்புள்ளது.
முதல் சுற்றை போன்றே இரண்டாம் சுற்றிலும் கணினி அறிவியல் படிப்புக்கு அதிக சேர்க்கை நடந்துள்ளது. மெக்கானிக்கல், சிவில் படிப்புகளுக்கு, மாணவர்களிடம் மவுசு குறைந்துள்ளது.
இரண்டு சுற்றுகளின் முடிவில், 80 கல்லுாரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 323 கல்லுாரிகளில் 10 சதவீதம் கூட இடங்கள் நிரம்பவில்லை. இதில், அண்ணா பல்கலையின் ஏழு உறுப்பு கல்லுாரிகளிலும், 10 சதவீதம் கூட சேர்க்கை நடக்கவில்லை.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், அதிக இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளில், 90 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
முன்னணியில் பிரபலமாக உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், 90 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment