போட்டித்தேர்வுகளில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?




இன்று TNPSC தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான சகோதர-சகோதரிகளின் பிரச்சினை கணக்கு பாடமே. நன்றாக படிப்பார்கள், நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் கணக்கு என்றால் பின் வாங்குவார்கள். அவர்கள் கணக்கில் இருந்து கேட்கப்படும் அந்த 25 கேள்விகளை மிகப் பெரிய தலைவலியாக உணர்வார்கள்.

போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்க வேண்டுமெனில் இந்த 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். அதற்கு குறைந்தால் உங்கள் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும்.




25 க்கு 24 எடுத்தால் உத்தமம்

25 க்கு 20 எடுத்தால் மத்திமம்

25 க்கு 15 எடுத்தால் மோசம்

25 க்கு 10 எடுத்தால் நாசம்




பெரும்பாலும், இரண்டு அல்லது மூன்று வினாக்கள் குறைபாட்டினால் வேலையைத் தவற விட்டவர்கள் கணக்கில் 15 முதல் 18 கேள்விகளுக்கே சரியான விடை அளித்து இருப்பார்கள்.




இந்த கணக்கினைக் கையாளுவது எப்படி?




● முதலில் நீங்கள் ஒன்றினை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், போட்டி தேர்வுக்குப் படிப்பவர்களில் அனைத்து பாடப் பகுதிகளிலும் வல்லுநர் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிலரே உள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்கள் தேக்க நிலையை அடையக் கூடிய பாடப் பகுதி என்று ஒன்று உண்டு. எல்லாரும் எல்லாவற்றிலும் வல்லவர் இல்லை.




● முதலில் நீங்கள், எனக்கு கணக்கு வராது, எனக்கும் கணக்கிற்கும் நீண்ட தூரம், கணக்கில் நான் வீக் என்ற எதிர்மறை எண்ணத்தினை மனதில் இருந்து நீக்க வேண்டும்.




● ரயில்வே, வங்கி போன்ற மற்ற போட்டித் தேர்வுகளை ஒப்பிடும் போது TNPSC தேர்வில் கணக்கு என்பது மிக மிக எளிதுதான். கணக்கினை ஒரு பூதம் போல் நினைத்து நாம் விலகியே இருப்பதனால் நமக்கு கடினமாக இருப்பது போல் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறதே தவிர உண்மையில் கடினம் அல்ல.




● நாம் கணக்கில் இருந்து விலகியே இருப்பதால், சில இலகுவான விஷயங்களைக் கூட தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். (உதாரணமாக சராசரி, இடைநிலை, முகடு, பகு எண், பகா எண், மீ.சி.ம, மீ.பெ.ம போன்றவை) இதன் காரணமாக சில எளிய வினாக்களைக் கூட தவற விட்டு விடுகிறோம், நான் மேலே உதாரணமாக கூறியவற்றின் விளக்கங்களைத் தேடிப் பாருங்கள், இதனையா நாம் இவ்வளவு நாள் அறியாமல் வைத்து இருந்தோம் என்று நீங்களே வருத்தப்படுவீர்கள்.




● நீங்கள் கணக்கினை படிக்கத் தொடங்கும் முன் எளிய பகுதியில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு ஒரு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும். அப்படியே மெதுவாக சற்று கடினமான பகுதிகளை புரிந்து கொள்ள முற்படுங்கள்.




● TNPSC யைப் பொறுத்த வரை, ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்களின் கூடுதல் 180 டிகிரி, ஒரு முழு வட்டத்தின் கோணம் 360 டிகிரி, அரை வட்டத்தின் கோணம் 180 டிகிரி, பித்தகோரஸ் தேற்றம் போன்ற அடிப்படை கணக்கியலைத் தெரிந்து கொண்டாலே 4-8 கேள்விகள் வரை விடை அளிக்கலாம்.




● 2012 ஆண்டில் இருந்து, இது வரை கேட்கப்பட்டு உள்ள பழைய வினாத் தாள்களில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக இதன் மூலம் நீங்கள் 2-4 வினாக்கள் வரை சரியான விடை அளிக்க இயலும்.




● TNPSC தேர்வினைப் பொறுத்த வரை கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளில் இருந்து பதிலைப் எடுத்து உள்ளீடு செய்து நீங்கள் தீர்வு காணலாம். இதற்கு சற்று நேரம் அதிகம் ஆகுமே தவிர உங்களால் மிகச் சரியான விடையை அளிக்க முடியும்.




● நீங்கள் கணக்கில் பலவீனமானவர் என்று கருதினால், உங்களுக்கு எது பலம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் மொழிப் பாடத்தில் வல்லவர் என்றால், எந்த விதமான கேள்விகள் கேட்டாலும் அதில் 95 கேள்விகளுக்கு சரியான விடையை என்னால் அளிக்க முடியும் என்ற அளவில் உங்கள் தயாரிப்பு இருக்க வேண்டும்.




● மனப் பாடம் செய்வதில் வல்லவர் என்றால், கணக்கினைத் தவிர மீதி அனைத்து பகுதிகளையும் (மொழிப்பாடம், அறிவியல், வரலாறு, புவியில், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியல் அமைப்பு) நன்றாகப் படித்து இருக்க வேண்டும். எந்த பகுதியையும் தவிர்த்தல் கூடாது. இதன் மூலம் கணக்கினால் ஏற்படும் இழப்புகளை ஓரளவு ஈடு செய்யலாம்.




● ஆனால், கணக்கில் மட்டுமே குறைந்த உழைப்பில் முழு மதிப்பெண்களைப் பெற முடியும் என்பதனையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கணக்கினை ஒதுக்கும் பட்சத்தில் நீங்கள் மிக மிக அதிகமாக உழைக்க வேண்டும்.




● கணக்கிற்கு விடை அளிக்கும் போது, கேள்வியை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன கேட்டு இருக்கிறீர்கள், நாம் என்ன கண்டு பிடித்து இருக்கிறோம் என்பதில் தெளிவு தேவை.




● TNPSC கணக்கினைப் பொறுத்த வரை, கேள்வியை - விடைகளை நன்கு உள் வாங்கி கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சூத்திரக் கண்ணோடு பார்க்காமல் இயல்பாக பார்க்க துவங்குங்கள். எளிதாக விடை அளிக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.