சி.ஏ.(C.A)படிப்பு பற்றிய நாம் 

அறிந்ததும் அறியாததும்! 


தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. 


சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 


60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. 


இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். 


அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. 


இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 


அதேசமயம், சராசரி வரவேற்புடனும் இருந்திருக்கிறது. 


ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம் பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள் இயங்கும் தணிக்கைத் துறைதான். (அதாவது Chartered Accountants அல்லது பட்டயக்கணக்காளர்)


அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.


வேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது. 


100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை. பை நிறையச் சம்பளம். 


இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.


முதலாவது கடினமான தேர்வு முறை.

இரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.


விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடுமே! என்ற பயம்.


அடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.


முதலில் சி.ஏ. தேர்வு பற்றி  பார்ப்போம்.


சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 


முதலில் பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். 


அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக் கடந்தபின்னர் #ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.


இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப் பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. 


பி.காம்.தான் என்றில்லை. எந்த டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம். படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். 


சி.ஏ. இண்டரில் 

முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும் இருக்கும். 


இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். 


ஒரு குரூப்பில் எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித மார்க்கையும் எடுக்க வேண்டும். 


இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா பேப்பர்களையும் எழுத வேண்டும். 


சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். 


அதில், முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும். 


இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். 


தேர்வு அட்டவணையும்கூட இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.


பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள் இருக்கும். 


எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. 


ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். 


மேலும், பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன் அதற்கேற்ப மாறும். 


மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும் சட்டங்களைப் பொறுத்து மாறும். 


பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.


இரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்புனர்வின்மை. மற்ற தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள் வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால் இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. 


இதைப்போலவே, மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். 

எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.


மேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக எதிர்மறையாகவே பதில்வரும். 


‘இத முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். 


எனவே, பெற்றோர்கள் மிகவும் தயங்குவார்கள். 


மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை யோசிக்கவைக்கும். 


அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும் கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.


அடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். 


ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில் இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. 


பொறியியல் படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். 

ஆடிட்டருக்கு 30 வயதில்தான் வருமானம். 


எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள் இதற்குத் தயங்குவார்கள். 


மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல் தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது. 


இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.


ஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம். படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால் தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு கேரியர் கிடைக்கும். 


ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். 


அவரின் சிபாரிசு எந்தக் கல்வி நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். 


அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.


சி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள். 


பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப் காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும். 


ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். 


இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ்.


இதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். 


ஆனால், ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.


தேர்வுகளும் சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.


சி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள், அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள், வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்துக்கு ஏற்ப யோசனை சொல்பவர்கள். 


ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கேற்ற லாபம் இருக்கிறதா? இல்லை நஷ்டமா? என கணக்குப் பார்ப்பவர்கள். 


ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய மாட்டார்கள். 


இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. 


சம்பளமும் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.


சி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால் ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். 


ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான் இருக்கும். 


எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில் குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா?


அப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ் செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். 


இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம். 


சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.


பெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். 


எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.