மாறி வரும் மாமல்லபுரம்- துணை நகரமாவதால் புதிய நவீன வசதிகள்
மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், தற்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர். என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அரசின் அனைத்து துறையின் கவனமும் தற்போது மாமல்லபுரம் பக்கம் திரும்பி உள்ளது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் என்றாலே சவுக்கு காடுகளும், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாததே நினைவுக்கு வரும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு இருட்டுவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள். இந்தநிலை தற்போது படிப்படியாக குறைந்து, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்து வசதி, நகரில் ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டது.மேலும் தொல்லியல்துறை சார்பில் புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தலைவர்கள் இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில அமர்ந்து ரசித்தனர். அங்குள்ள அனைத்து சின்னங்களையும் பார்வையிட்டு அதன் சிறப்புகளை பிரதமர் மோடி, சீன அதிபரிடம் விளக்கி கூறினார்.இதன் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் பல மடங்கு அதிகரித்தது. அதன் தொன்மை மற்றும் புராதன சின்னங்களின் வரலாறு குறித்த தேடுதல்கள் அதிகரித்தன.பிரமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர் மாமல்லபுரம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், புராதன சின்னங்களுக்கு இரவில் லேசர் ஒளி, கருங்கல் நடைபாதை, டிஜிட்டல் பலகைகள், நவீன தெரு விளக்குகள் என மேம்படுத்தப்பட்டது.
Post a Comment