திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: விருந்தோம்பல்
குறள் : 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள்:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
பழமொழி :
Win or lose, never regret.
வென்றாலும், இழந்தாலும் வருந்தாதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.
2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன், கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
உங்கள் பிரச்சனைகளைக் கண்டு விலகி ஓடாமல், அவற்றை எதிர்கொண்டால் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் சிறியதாகிவிடும். --வில்லியம் ஹால்சி
பொது அறிவு :
1. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?
திருத்தக்க தேவர்.
2. சாக்கிய முனி என்பது யாருடைய மற்றொரு பெயர் ?
புத்தர்.
English words & meanings :
council - committee,noun. ஆலோசனை குழு. counsel - advice. noun - புத்திமதி. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
வேர்க்கடலையில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.
நார்ச்சத்துக்கள் பொதுவாக ஜீரணத்தை எளிதாக்கவும் சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் அதிகமான கலோரிகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
NMMS Q
Girl : ? :: Boy : Handsome.
1) Smart. 2) Tall. 3) Fair. 4) Beautiful.
விடை: Beautiful
டிசம்பர் 13
\நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்
18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.[1]
நீதிக்கதை
ஜெகனின் புதுசட்டை
பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான்.
ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான்.
பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான்.
ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.
ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது.
ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு.
என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன்.
ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு.
அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான்.
உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன்.
கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.
எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு.
நீதி :
முட்டாள் தனமான கோபம் ஆபத்தானது
இன்றைய செய்திகள்
13.12.22
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செங்கண்மா வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திபங்கர் தத்தா நேற்று பதவியேற்றார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை ரயில் தொடர்பு இல்லாத, 50 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊர்களுக்கு ரயில் இணைப்பு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 9 ஊர்களில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள நாற்காலி, காபி இயந்திரம், ப்ரொஜெக்டர் போன்றவற்றை ஏலம் விட எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது அந்நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.
17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.
ஆசிய செஸ் போட்டி: தமிழக வீராங்கனை சர்வாணிகா ரேபிட் 6 தங்கம் வென்று சாதனை.
உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி 'சாம்பியன்'.
புரோ கபடி பிளே ஆப் சுற்று இன்று தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்.
Post a Comment