இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கு விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம். அப்படி விவசாயத் துறையில் மனிதவளம் மிக அதிகமாக இருந்தும் கூட உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை பாதுகாக்க முடியாத காரணத்தால் குறைவான விலைக்கு வேறு வழியின்றி விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
விவசாயத் துறையில் பல வளர்ச்சிகள் இருந்தபோதும் அது குறித்த தெளிவின்மை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், முறையான பயிற்சியை பெற்றால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை பாதுகாப்பாக வைத்திருந்து சரியான விலை கிடைக்கும் நேரத்தில் விற்க முடியும். இதற்கான பயிற்சியினை விருப்பமுள்ளவர்களுக்கு வழங்க மத்திய அரசு, தஞ்சாவூரில், தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தை நிறுவியுள்ளது.
இந்தியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் குறைவானவர்களே ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களில் 3 சதவீதம் உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுவதாகவும், 30 சதவீதத்திற்கும் அதிகமான காய்கறிகள், பழங்கள் வீணாகி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பால் உற்பத்தி, காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி, உணவு தானியங்கள் உற்பத்தி, மீன்கள் வளர்ப்பு ஆகியவற்றில் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், முறையான உணவு பதப்படுத்தும் கல்வியறிவு பெற்றவர்கள் மிக குறைவாக இருப்பதால், ஆண்டுக்கு ரூ.44,000 கோடி அளவுக்கு உணவு பொருள்கள் வீணாக்கப்பட்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இத்துறையில் மனிதவள தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் கல்வியறிவு பெற்றவர்களுக்கான தேவையும் தினம்தோறும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு, இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் உணவுத்துறையில் பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும், உணவு பதப்படுத்துதலுக்கு தேவையான தொழில்நுட்பங்களையும் கற்பித்து வருகின்றது. புதிதாக தொழில் கற்று எதிர்காலத்தை வளமாக்க விரும்பும் இளம் தொழில்முனைவோர்களுக்கு இந்நிறுவனம் பலவிதமான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
வணிக முறையில் பழக்கூழ் தயாரித்தல், தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரித்தல், உலர வைத்தல் தொழில்நுட்ப முறையில், பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்தல், சிப்ஸ் வகைகள், பேக்கரி உணவு பொருள்களுக்கான தொழில்நுட்பங்கள், உடனடி தயார்நிலை உணவு பொருள்களுக்கா ன தொழில்நுட்பங்கள், ஆரோக்கியமான துரித உணவு வகைகள், மாம்பழத்திலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், ப்ரூட்டி தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், பழ ஜாம் மற்றும் ஜெல்லி வகைகள், ஊறுகாய் தயாரிப்பு தொழில்நுட்ப முறைகள், ரொட்டி மற்றும் ரொட்டி சார் அடுமனை பொருள்ட்கள், சேமியா மற்றும் நூடுல்ஸ் தயாரிப்பதற்கான முறைகள், பாஸ்தா வகைகள் (நூடுல்ஸ், மக்ரூனி, ஸ்பகட்டி) மற்றும் சில இனிப்பு மற்றும் பழவகை உணவு வகைகள், நெல்லியிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், வாழைப்பழத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரித்தல், மசாலா தயாரிப்பிற்கான தொழில் நுட்பங்கள், குக்கீஸ் வகைகள் தயாரிக்கும் முறை, கற்றாழையிலிருந்து பழபானம் தயாரித்தல், முருங்கைக்காயை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், சிறுதானியங்களிலிருந்து பேக்கரி பொருட்கள் தயாரித்தல், மால்ட், பிஸ்கட் தயாரிக்கும் முறை, சவ்வூடு பரவுதல் முறையில் தேங்காயைப் பதப்படுத்துதல், முட்டையில்லா பேக்கரி பொருள்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள், முளைகட்டிய அரிசி கேக் வகைகள், காளானிலிருந்து உணவுப் பொருள்கள் தயாரித்தல், ஊட்டச்சத்து மாவு வகைகள், தக்காளிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரித்தல் போன்ற பலவிதமான பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தில், புட் பயோ-டெக்னாலஜி, புட்-இன்ஜினியரிங், புட் பேக்கேஜிங், புட் பிராசசிங், புட் புராடெக்ட், புட் சேப்டி மற்றும குவாலிட்டி டெஸ்டிங், பிரைமரி புராசசிங், ஸ்ட்ரோரேஜ், ஹேண்டலிங் போன்ற பல்வேறு துறைகள் உள்ளன. இதன் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவ்வப்போது உணவுப் பொருள்கள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டு திறமையானவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டவும் வழிவகை செய்யப்படுகிறது.
National Institute of Food Technology, Entrepreneurship and Management - Thanjavur (NIFTEM-T) நிறுவனத்தில், பி.டெக்(புட் டெக்னாலஜி), எம்.டெக்(புட் புராசஸ் இன்ஜினியரிங்), எம்.டெக்(புட் புராசஸ் டெக்னாலஜி), எம்.டெக்(புட் சேப்டி மற்றும் குவாலிட்டி அஸ்ஸþரன்ஸ்), பி.எச்டி(புட் புராசஸ் இன்ஜினியரிங்), பி.எச்டி(புட் புராசஸ் டெக்னாலஜி) போன்ற பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. எனவே, எதிர்கால வாழ்க்கையை ஏற்றமிகு வாழ்க்கையாக உயர்த்த வேண்டும் என நினைப்பவர்கள், தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் உரிய பயிற்சிகளை மேற்கொண்டால் வாழ்வு வசமாகும்.
மேலும் விபரங்களுக்கு http://www.niftem-t.ac.in என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.
Post a Comment