அமெரிக்கா, ரஷியா போன்ற வல்லரசுகளாலும் முடியாத ஒன்றை முதல் முயற்சியிலேயே சாதித்துள்ளனர் இந்திய விஞ்ஞானிகள். "கிராவிட்டி' என்கிற ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டை விட மிகக்குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியதற்காக உலகமே வியந்து நமது விஞ்ஞானிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்திலும், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றுவிட்டால், உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவுதளமாக இந்தியா மாற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிலவில் இறங்கி ஆய்வு நடத்தும் "சந்திரயான்-2' விண்கலம், இந்திய பிராந்தியத்துக்கான தனி நேவிகேஷன் அமைப்பு (ஐஆர்என்எஸ்எஸ்), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO/இஸ்ரோ) எதிர்காலத் திட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அறிவியலில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு புதிய சவால்கள், வாய்ப்புகளோடு காத்திருக்கிறது விண்வெளித் துறை. அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் 2 மடங்காக அதிகரிக்கும் என்கிறார், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர்.
விண்வெளித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பாக அவர் கூறியது:
இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றுவதற்கு ஒவ்வோர் ஆண்டும் 100 முதல் 200 விஞ்ஞானிகள் வரை புதிதாகத் தேவைப்படுகின்றனர். இப்போது இஸ்ரோவில் மொத்தம் 16 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இஸ்ரோவுக்காக உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களில் 20 ஆயிரம் பேர் வரை பணியாற்றுகின்றனர்.
ஆண்டுக்கு 3 முதல் 4 செயற்கைக்கோள்கள் இப்போது விண்ணில் செலுத்தப்படுகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 6 முதல் 10 செயற்கைக்கோள்களாக அதிகரிக்கும்.
ஏவப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இஸ்ரோவால் மட்டும் அனைத்துப் பணிகளையும் செய்ய முடியாது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாகத் தேவைப்படும் என்பதால், இந்தத் துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும் அதிகரிக்கும். எனவே, அடுத்த சில ஆண்டுகளில் விண்வெளித் துறையில் வேலைவாய்ப்புகள் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பி.இ., பி.டெக். படித்தவர்களும் சேரலாம்
ஒரு சில ஐ.ஐ.டி.க்களிலும், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்திலும் பி.டெக். படிக்கும் மாணவர்கள் வளாகத் தேர்வு மூலம் இஸ்ரோவுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பி.இ., பி.டெக். முடித்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் இஸ்ரோவில் பணிபுரியத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும். 10, பிளஸ் 2, பட்டப்படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்கும். ஆனால், மேற்கண்ட 2 பிரிவுகள் அளவுக்கு அதிகமான இடங்கள் இருக்காது.
எம்.இ., எம்.டெக். முடித்த பிறகும் இஸ்ரோவில் சேரலாம். இந்த மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது. நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்படும். பிஎச்.டி. முடித்த மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஏரோஸ்பேஸ், விண்வெளித் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்துள்ள மாணவர்களுக்கு
சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சியாளர்களாக நேரடியாக வேலை கிடைக்கும்.
அதேபோல், பி.எஸ்சி, எம்.எஸ்சி. படிப்புகளில் இயற்பியல், கணிதம் முடித்த மாணவர்களும் இஸ்ரோவில் சேரலாம்.
டிப்ளமோ, ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு ஆய்வகங்களில் அதிகத் தேவை உள்ளது. இந்த மாணவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (IIRS)
இஸ்ரோ சார்பில் டேராடூனில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (Institute of Remote Sensing (IIRS) என்ற கல்வி நிறுவனம் நடத்தப்படுகிறது. இதில் எம்.எஸ்சி, எம்.டெக். படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.
அங்கு எம்.எஸ்சி. ஜியோ இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் எர்த் அப்சர்வேஷன், எம்.டெக். ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோ இன்பர்மேஷன் சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சேர மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கு மே மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும், ஜூலை மாதத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களை www.iirs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையங்களிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆய்வு மையங்களிலும் வேலை கிடைக்கும்.
Post a Comment