உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சத்தால் நிறைய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. முதலீடுகள் குறைந்துவிட்டதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் மூலதனம் இல்லாமல் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தை (ஐஐடி) சேர்ந்த மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி, மும்பை ஐஐடி ஆகிய ஐஐடிகளை சேர்ந்த மாணவர்களுக்கு மிரள வைக்கும் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் கான்பூர் ஐஐடியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஐஐடி நிறுவனங்களில் நடைபெற்று வரும் கேம்பஸ் இண்டர்வியூ வாயிலாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் கேபிடல் (Jane Street Capital) நிறுவனம் கான்பூர் ஐஐடியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இதுபோக, டெல்லி ஐஐடி மற்றும் மும்பை ஐஐடியை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் 4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.
சென்னை ஐஐடியை சேர்ந்த சுமார் 333 மாணவர்களுக்கு பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் பிரபலமான Microsoft, Qualcomm, Honeywell, Texas Instruments, Goldman Sachs, Oracle ஆகிய பெரு நிறுவனங்களில் சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இதில் Microsoft நிறுவனம் 17 பேருக்கும், Goldman Sachs 15 பேருக்கும், Texas Instruments 14 பேருக்கும், Oracle நிறுவனம் 13 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகபட்ச சம்பளத் தொகையும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த Uber நிறுவனம் ஐஐடி மாணவர் ஒருவருக்கு அதிகபட்சமாக 2.16 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கியது. இந்த ஆண்டில் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் 4 கோடி ரூபாய் அதிகபட்ச சம்பளமாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் பெருமைமிக்க உயர்கல்வி நிறுவனமான ஐஐடி உலகளவில் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமாக இருக்கிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய நிறுவனங்கள் ஐஐடி மாணவர்களை வேலைக்கு எடுத்து வருகின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமோ மிக அதிகம்.
Post a Comment