MBBS: பயிற்சிக்காக காத்திருக்கும் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள்; விடைசொல்லுமா அரசு?
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் (Foreign Medical Graduates), இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையவது அவசியம். தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிவது அவசியம். அதன் பிறகே அரசு அனுமதி பெற்ற மருத்துவராக இந்தியாவில் அவர்களால் பணியாற்ற முடியும். பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய ₹2 இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவது வழக்கம். மாநிலங்களுக்கு ஏற்றவாறு இத்தொகை மாறுபடும். ஒடிசா போன்ற மாநிலங்களில் ₹30 ஆயிரம் ரூபாயும், தமிழகத்தில் ₹3.5 இலட்சமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
அதே நேரத்தில், ஒரு கல்லூரிக்கான உள்ளிருப்பு பயிற்சிக்கான எண்ணிக்கையை 10 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாகக் குறைத்தது தேசிய மருத்துவ ஆணையம். இதனால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பயிற்சி மருத்துவராக பணிபுரிய மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிவதற்கான தொகையை ரத்து செய்ய வேண்டும், பயிற்சி மருத்துவருக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும், மேலும் பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும்போது அவர்களுக்காக அரசு சார்பில் உதவித் தொகை அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
மாணவர்களது கோரிக்கைக்களை கேட்டறிந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உள்ளிருப்புப் பயிற்சிக்கான மொத்த இடங்களை மத்திய தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதியன்று அதிகரித்தது. இதன்மூலம் தமிழகத்திற்கு 1881 பயிற்சி இடங்கள் அதிகமாக கிடைக்கப்பெற்றது. மேலும் தமிழக அரசு சார்பில் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வசூலிக்கப்பட்டு வந்த உள்ளிருப்புப் பயிற்சிக்கான கட்டணத்தொகை ₹3,54,000-ல் இருந்து ₹29,500 ஆக குறைக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களாகியும் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவர் மாணவ சங்கம் செயலாளர் செந்தில் குமாரிடம் பேசினோம். " வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி மருத்துவராக பணிபுரிய காத்திருக்கின்றனர். அவர்கள் பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்ளவதற்கான உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவர்களால் பயிற்சியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிற்சிக்கான கட்டணத் தொகை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் இன்னும் எடுக்கப்படவில்லை. மாணவர்களில் பலரும் முதல் தலைமுறை பட்டதாரிகள். கடன் வாங்கி ஆறு வருடம் வெளிநாட்டில் படித்துவிட்டு, மீண்டும் 2 வருடம் தகுதித் தேர்விற்குத் தயாராகி, தேர்ச்சி பெற்ற பின்பும் கூட, பயிற்சி மருத்துவராவதற்கு இரண்டு லட்சம் கேட்பது வேதனை அளிக்கிறது " என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.: பயிற்சிக்காக காத்திருக்கும் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள்; விடைசொல்லுமா அரசு?
Post a Comment