TNEA 2022: 3ம் சுற்று இன்ஜி., கவுன்சிலிங் 27 ஆயிரம் பேர் புறக்கணிப்பு!
அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நான்கு சுற்றுகளில் இரண்டு சுற்றுகளுக்கு கவுன்சிலிங் முடிந்துள்ளது. மூன்றாவது சுற்று கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இதில், பொது பாடப்பிரிவில், முந்தைய சுற்றில் இருந்து, 13 ஆயிரம் பேர் உட்பட 62 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 35 ஆயிரம் பேர் மட்டுமே விருப்பமான பாடம் மற்றும் கல்லுாரிகளை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். 27 ஆயிரம் மாணவர் சேர்க்கை பெறாமல், ஆன்லைன் பதிவு கூட செய்யாமல் வெளியேறி விட்டனர்.
பதிவு செய்த 35 ஆயிரம் பேரில், 32 ஆயிரம் பேருக்கு மட்டும், அவர்கள் பட்டியலில் குறிப்பிட்டிருந்த கல்லுாரிகளில் ஒன்று ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை நேற்று வெளியானது. பொது பாடப்பிரிவில் இடம் பெற்றவர்களில், 6,000 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றனர்.
அவர்களில் 4,000 பேர் மட்டும், விருப்பமான இடங்களை பதிவு செய்துள்ளனர்; 2,000 பேர் பதிவு செய்யவில்லை. பதிவு செய்தவர்களில், 3,800 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் அனைவரும், இன்று மாலைக்குள் தங்களுக்கான இடங்களை, ஆன்லைனில் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களுக்கு, ஒதுக்கீட்டு உத்தரவு நாளை காலை வழங்கப்படும்.
இந்த ஒதுக்கீட்டு உத்தரவு பெற்ற மாணவர்கள், 26ம் தேதிக்குள் கல்லுாரிகள் அல்லது கவுன்சிலிங் உதவி மையங்களுக்கு சென்று, சான்றிதழ்களை அளித்து, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
إرسال تعليق