வங்கக் கடலில் அக்.20-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 18-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 20-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 20-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அக். 17, 18-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யலாம். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment