மவுசு கூடும் மாற்று மருத்துவ படிப்புகள் (AYUSH courses)


இந்த மருத்துவ முறைகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், கல்வியை பிரபலப்படுத்தவும் மத்திய அரசால் 2014ம் ஆண்டு, ஆயுஷ் அமைச்சரகம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டது.


கவுன்சில்கள்: சென்ட்ரல் கவுன்சில் பார் இந்தியன் மெடிசின் (சி.சி.ஐ.எம்.,), சென்ட்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் ஆயுர்வேதிக் சயின்சஸ் (சி.சி.ஆர்.ஏ.எஸ்.,), சென்ட்ரல் கவுன்சில் பார் ஹோமியோபதி (சி.சி.எச்.,), சென்ட்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் ஹோமியோபதி (சி.சி.ஆர்.எச்.,), சென்ட்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் யுனானி மெடிசின் (சி.சி.ஆர்.யு.எம்.,), சென்ட்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் யோகா அண்ட் நேச்சுரோபதி (சி.சி.ஆர்.ஒய்.என்.,), சென்ட்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் சித்தா (சி.சி.ஆர்.எஸ்.,) ஆகிய பிரத்யேக கவுன்சில்களும் இந்திய மற்றும் மாற்று மருத்துவ முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


ஆயுர்வேதா (BAMS)


இன்றைய மாணவர்கள் மத்தியில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அடுத்தபடியாக, பிரபலமான மருத்துவப் படிப்பாகவும், இந்திய மருத்துவ முறைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்வது ’ஆயுர்வேதா’!


படிப்பு: BAMS, பேச்சலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி (பி.ஏ.எம்.எஸ்.,) எனும் ஐந்தரை ஆண்டுகால படிப்பு (ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் உட்பட) நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.


இப்படிப்பில், அனாடமி அண்ட் பிசியோலஜி, சம்ஸ்கிருதம், ஆயுர்வேதிக் டாக்சிகாலஜி, பார்மகாலஜி, பார்மசூட்டிக்ஸ், ஜெனரல் சர்ஜரி, ஈ.என்.டி., ஆப்தோமாலஜி, பஞ்சகர்மா, பீடியாட்ரிக்ஸ், கைனகாலஜி உட்பட பல்வேறு பாடங்கள் இடம்பெற்றுள்ளன.


முதுநிலை படிப்புகள்:  இளநிலை பட்டப்படிப்பிற்கு பிறகு, மூன்று ஆண்டுகால எம்.டி., படிப்பில் பொது மருத்துவம், பல் மருத்துவம், பஞ்சகர்மா, கைனகாலஜி, சர்ஜரி, ஆப்தோமாலஜி, ஈ.என்.டி., பீடியாட்ரிக்ஸ், சைக்யாட்ரி, பேதாலஜி, டாக்சிகாலஜி, பார்மகாலஜி, அல்கெமி, பார்மசி, பிரவெண்டிவ் மெடிசின், அனாடமி, பிசியோலஜி, அனஸ்தீசியா, ரேடியோலஜி உட்பட 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெறலாம்.

முதுநிலை படிப்பிற்கு பிறகு, ஆயுர்வேத மருத்துவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ, பேராசிரியராகவோ செயல்படலாம். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மட்டுமின்றி, பல்வேறு முதுநிலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகளும் ஆயுர்வேதா மருத்துவ துறையில் வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: http://ayush.gov.in, www.ccimindia.org, www.ccras.nic.in


ஹோமியோபதி (BHMS)


அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் மற்றும் ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கு அடுத்துதாக, நமது நாட்டில் மூன்றாவது முக்கிய மருத்துவ படிப்பு ஹோமியோபதி!

படிப்பு: பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.,


படிப்பு காலம்: ஓர் ஆண்டுகால கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சி உட்பட மொத்தம் ஐந்தரை ஆண்டுகள்.


பாடத்திட்டம்:   மனித உடலின் இயற்கையான சிகிச்சை முறை குறித்து கற்பிக்கும் ஒரு முழுமையான மருத்துவ முறையை ஹோமியோபதி கொண்டுள்ளதால், இந்த முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாத வகையிலான இனிப்பு மாத்திரைகளுடன், நீர்த்த திரவமே மருந்தாக வழங்கப்படுகிறது. உடற்கூறியல், திசுவியல், கருவியல் ஆகிய அடிப்படை மருத்துவத்துடன், நோயியல், ஒட்டுண்ணியியல், தடயவியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையும் இந்த மருத்துவ படிப்பில் கற்பிக்கப்படுகிறது.


வாய்ப்புகள்: ஒரு பொது ஹோமியோபதி மருத்துவராக மட்டுமின்றி, குழந்தை மருத்துவம், உளவியல் என குறிப்பிட்ட பிரிவில் நிபுணராகவும் சுயமாக செயல்படலாம். ஹோமியோபதி மருந்து நிறுவனங்களிலும் பணியாற்றலாம். தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் வாய்ப்புகள் உண்டு.


சித்த மருத்துவம் (BSMS)


தமிழக மருத்துவ முறைகளில் உருவான சித்த மருத்துவ படிப்பு, தமிழக மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.


படிப்பு: BSMS பேச்சுலர் ஆப் சித்தா மெடிசின் அண்ட் சர்ஜரி - பி.எஸ்.எம்.எஸ்.,

படிப்பு காலம்: ஐந்தரை ஆண்டுகள்

பாடத்திட்டம்: உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இயங்கும் மனித உடலில் உள்ள ரத்தம், பிளாஸ்மா, தசை, கொழுப்பு, எழும்பு, நரம்பு மற்றும் செமன் ஆகிய 7 முக்கிய உறுப்புகளை காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகிய மூன்று கூறுகளே கட்டுப்படுத்துகின்றன என்பது சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கிய அம்சம். இப்படிப்பில், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், உடற்கூறியல், உடலியல், நோயியல், தடயவியல் மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோயியல் மற்றும் நச்சுயியல் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.


வாய்ப்புகள்: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்த மருத்துவராக பணியாற்றலாம். போதிய பயிற்சி மற்றும் அனுபவத்திற்கு பிறகு சுயமாகவும் கிளினிக் நடத்தலாம். பொது மருத்துவம், மருந்தியல், சிறப்பு மருத்துவம், குழந்தை மருத்துவம், நோயியல் மற்றும் நச்சுயியல் ஆகிய பிரிவுகளில் முதுநிலை படிப்பையும் மேற்கொள்ளலாம்.


யுனானி (BUMS)


ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா ஆகிய மாற்று மருத்துவ படிப்புகளின் வரிசையில் அடுத்ததாக முக்கிய இடம்பெறுவது யுனானி!

முக்கியத்துவம் கமில்-இ-திப்-ஒ-ஜராஹத் என்றும் அழைக்கப்படும் யுனானி மருத்துவம் பிரபல கிரேக்க மருத்துவர்களான ஹிப்போகிரட்ஸ் மற்றும் கேலன் ஆகியோரது போதனையால் உருவானது. பெர்சோ-அரபிக் வகையான இந்த மாற்று மருத்துவ முறை, முகலாயர்கள் காலக்கட்டத்தில் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


படிப்பு: BUMS , பேச்சுலர் இன் யுனானி மெடிசின் அண்ட் சர்ஜரி - பி.யு.எம்.எஸ்.,


படிப்பு காலம்: ஓர் ஆண்டு கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் ஐந்தரை ஆண்டுகள்.


பாடப்பிரிவுகள்: அரபிக், யுனானி மருத்துவம், உடற்கூறியல், உடலியல், நோயியல், தடுப்பு மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகளிர் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட பல்வேறு பாடங்கள் இப்படிப்பில் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் வழங்கப்படும் இப்படிப்பு முழுநேரமாக மட்டுமின்றி தொலைநிலை வழியிலும் கற்பிக்கப்படுகிறது.


முதுநிலை படிப்புகள்: பி.யு.எம்.எஸ்., படித்தவர்கள், 14 வகையான பிரிவுகளில் எம்.எடி., அல்லது எம்.எஸ்., படிப்பை மேற்கொள்ளலாம்.


நேச்சுரோபதி மற்றும் யோகா (BNYS)


நேச்சுரோபதி மற்றும் நவீன மருத்துவம் இரண்டும் ஒருங்கிணைந்த இந்த மருத்துவ படிப்பு தற்போது நாடு முழுவதிலும் சுமார் 250 கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன.


படிப்பு: BNYS, பேச்சுலர் ஆப் நேச்சுரோபதி அண்ட் யோஜிக் சயின்ஸ் - பி.என்.ஒய்.எஸ்.,


படிப்பு காலம்: ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் ஐந்தரை ஆண்டுகள்.


பாடப்பிரிவுகள்: உடற்கூறியல், நோயியல், கையாளுதல் சிகிச்சை, உணவியல் மற்றும் சிகிச்சை, அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், உடலியல், மருந்தியல், புனர்வாழ்வு மற்றும் யோகா, சமஸ்கிருதம், தடயவியல் மருத்துவம், நச்சுயியல், உளவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யுனானி போன்ற மாற்றுவ மருத்துவ படிப்புகளுடன் சோவா-ரிக்பா எனும் இமயமலை பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் மருத்துவ முறையையும் அங்கீகரித்துள்ளது. தரம்சாலாவில் உள்ள சென்ட்ரல் கவுன்சில் பார் திபெத்தியன் மெடிசின் இம்முறை மருத்துவ படிப்பை வரைமுறைப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொத்தம் ஆயிரம் சோவா-ரிக்பா மருத்துவர்கள் தற்போது உள்ளனர்.


மேலும் விபரங்களுக்கு: www.ayush.gov.in

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.